Thursday, August 20, 2009

சுவாதியின் திருமணமும், திருமணம் சார்ந்தவையும்!!

சுவாதி மின்சார ரயிலை விட்டு இறங்கி நேரம் பார்த்த போது இரவு மணி சரியாக பத்து. தோழிகள் சொன்னதைக் கேட்டு ஜோதியின் திருமண வரவேற்பில் சற்று கூடுதலான நேரம் இருந்தது தப்போ என நினைத்து வருந்தினால். பீச் ஸ்டேஷனில் அவள் இறங்கின நேரம் அவளையும் சேர்த்து மொத்தமே பத்து பதினைந்து பேர் தான் இருந்தார்கள்.

ஸ்டேஷன் வெளியே வந்து அவளின் அண்ணன் சூர்யாவை தேட தொடங்கும் முன்பே அவன் கண்ணில் தென்பட்டான். சாரி அண்ணா உன்னை ரொம்ப நேரம் காக வச்சிட்டேன் என கூறிக் கொண்டே அவனின் பைக்கில் அமர்ந்து கொண்டாள். அவள் பேசிய எதற்குமே சூர்யா பதில் சொல்லாததை கண்டு யோசனையுடன் "என்ன ஆச்சு அண்ணா?" என வினவினால். இரண்டு நொடி மௌனத்திற்கு பிறகு "சுவாதி, வீட்டுக்கு கிருஷ்ணாவோட பேரன்ட்ஸ் வந்துருந்தாங்க, கிருஷ்ணா இன்னும் மூணு வாரத்துல US - இருந்து வரானாம், எப்போ கல்யாணத்த வச்சிக்கலாம்னு கேட்டாங்க, நீ வீட்டுல இல்லாததால நீ இருக்கும் போது பேசிக்கலாம்னு அப்பா சொல்லிட்டாங்க. அப்புறம் கொஞ்ச நேரம் இருந்து உனக்காக வெயிட் பண்ணினாங்க, நீ வீட்டுல செல்போன வச்சிட்டு போனதால நீ எப்போ வருவேன்னு தெரியாம எட்டரை மணிக்கு கிளம்பி போய்ட்டாங்க" அவங்க போன ரெண்டாவது நிமிஷம் நீ கால் பண்ணி என்னை பீச் ஸ்டேஷன்க்கு வர சொன்ன.

சுவாதி "ஹயையோ.. அவங்க வந்த நேரம் பாத்து இல்லாம போய்ட்டேனே" என வருத்தம் வார்த்தையில் தெரிய வருந்தினால். "சுவாதி, நீ கண்டிப்பா கிருஷ்ணாவ தான் கல்யாணம் பண்ணிக்கனுமா?" என சூர்யா கவலை தோய்ந்து கேட்டான்.

"அண்ணா இத பத்தி நாம எல்லாரும் நெறைய பேசியாச்சு, பதில் தெரிஞ்ச கேள்விக்கு வேற பதில் கிடைக்கும்மான்னு தேடுறதால ஒரு பிரயோஜனமும் இல்லை. இனிமேல் இந்த கேள்வியை என் கிட்ட கேக்காத, நீ எதிர்பாக்குற பதில் உனக்கு நிச்சயமா கிடைக்காது." என சொல்லிய நேரம், சூர்யாவின் பைக் வீட்டு வாசலில் சென்று நின்றது. அதற்க்கு மேலே எதுவும் பேசாமல் அண்ணனும், தங்கையும் மௌனமாய் வீட்டின் உள்ளே சென்றனர்.

அரை மணிக்கு பிறகு, குளித்து இரவு உடைக்கு மாறி இருந்த சுவாதி, வீட்டின் வரவேற்ப்பறையில் இருந்த சோபாவில் கையில் டிவி ரிமோட் உடன் அமர்ந்தாள். டைனிங் டேபிளை சுத்தம் செய்து முடித்துவிட்டு வந்து மீனாக்ஷியும் மகளின் அருகில் அமர்ந்தாள். பின்பு கிருஷ்ணாவின் பெற்றோர் வந்து சென்றதையும் அவர்கள் கூறியதையும், அவர்கள் சென்றபின் சுவாதியின் அண்ணனும், அப்பாவும் பரிமாறிக் கொண்ட உரையாடல்களையும் சுவாதியிடம் சொல்லி முடித்தாள். ரெண்டு நிமிடம் அம்மாவிடம் தான் சென்று வந்த வரவேற்பு பற்றி பேசி விட்டு, தனது அறைக்கு சென்று கதவடைத்துக் கொண்டாள் சுவாதி!! நெற்றி சுருங்க யோசனையுடன் செல்லும் மகளை சற்றே கவலையுடன் கவனித்தாள் மீனாக்ஷி.

அறைக்கு வந்து படுக்கையில் விழுந்த சுவாதிக்கு கடந்த ஒரு வருடமாக வீட்டில் நடக்கும் பனிப்போர் பற்றிய யோசனை அதிகமானது. படுகையில் உருண்டு செல்போனை கையில் எடுத்து அதில் சேமித்து வைத்திருக்கும் கிருஷ்ணாவின் புகைப்படத்தை ஆசையாக பார்த்தாள்.

நினைவுகள் ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு கிருஷ்ணாவை முதன் முதலில் அவள் பார்த்த அந்த நாளுக்கு கொண்டு சென்று நிறுத்தியது.

ரெண்டு ஆண்டுகளுக்கு முன்பு..

"அன்று புதன் கிழமை, நெறஞ்ச முகுர்த்த நாள். காலை ஐந்து மணியில் இருந்தே சுவாதியின் அம்மா மீனாக்ஷி, அப்பா மகேந்திரன், அண்ணன் சூர்யா என எல்லாருமே காலில் சக்கரத்தை கட்டி கொண்டதைப் போல ஓடி ஓடி வேலைகளை செய்து கொண்டிருந்தனர். ஆறு மணிக்கு பொறுமையாக எழுந்த சுவாதி குளித்து முடித்து, "என்ன புடவைமா கட்டுறது என நடு ஹாலில் வந்து சிணுங்கினாள். "ஒன்பது மணிக்குள்ள கபாலிஷ்வர் கோயில்ல இருக்கனும் , நீ என்னன்னா இன்னும் கிளம்பாமல் நிக்குற" என கேட்டான் சூர்யா. "நான் இப்படியே இந்த டிராக்ஸ், டி ஷர்ட்ல வந்த கூட மாப்பிள்ளைக்கு என்னை பிடிக்கும் தெரிஞ்சிக்கோ" என்றால் சுவாதி.

ஒரு வழியாய் அனைவரும் கிளம்ப, சரியாக ஒன்பது ஆக ஐந்து நிமிடம் இருக்கும் போது சன்னிதானத்தில் இருந்து தரிசனம் பார்த்து மொத்தக் குடும்பமாய் வெளியில் வந்தார்கள் நால்வரும். கரும் பச்சையில் அரக்கு பார்டர் போட்ட சில்க் காட்டன் புடவையில் பந்தமாய் ஒளிர்ந்தாள் சுவாதி. வெளியில் அவர்கள் வரவும், மாப்பிள்ளை குடும்பத்தினர் கோயிலக்குள் வரவும், ஒரு கணம் கிருஷ்ணாவை அடையாளம் கண்ட சுவாதி, மூச்சு திணறுவது போல் ஒரு உணர்வைக் கொண்டாள்.

அவர்கள் மூவராய் வந்திருந்தார்கள். கிருஷ்ணாவின் தம்பியால் வர இயலவில்லை என்றும் சொன்னார்கள். பின்பு ஒரு நல்ல இடமாய் பார்த்து பிரகாரத்தில் அமர்ந்து கொண்டாரகள் பெண்கள். ஆண்கள் நால்வரும் நின்று பேசிக் கொண்டிருந்தார்கள். இங்கு உடன் இருக்கும் இருந்து பெண்களுடனும் பேசினாலும், தன்னை இரு விழிகள் நோக்குவதை அவளால் உணர முடிந்தது. அந்நினைப்பு அவளுக்கு கழுத்தில் ஒரு குறுகுறுப்பை தந்தது. இயல்பாய் இருக்க முடியாமல் திணறினாள்.

அந்நேரம் சரியாக அவளிடம் வந்த சூர்யா, "சுவாதி, கிருஷ்ணா உன் கூட கொஞ்சம் பேசனுமாம், அப்படியே ரெண்டு பேரும் பிரகாரத்தை சுத்திட்டு வாங்க" என்றான். மிரட்சியுடன் அம்மாவை பார்த்தாள் சுவாதி. அதை கண்ட கிருஷ்ணாவின் அம்மாவும் சுவாதியின் அம்மாவும், "போயிட்டு வாமா, இதுல என்ன இருக்கு. பேசினாதான முடிவு எடுக்க முடியும்" என புன்னகையுடன் கூறினார்கள்.

பரஸ்பர புன்னகைக்கும், அறிமுகத்திற்கும் பின்பு, இருவரும் பிரகாரத்தை சுற்றி நடக்க ஆரம்பித்தார்கள்.

யார் முதலில் ஆரம்பிப்பது என்ற சின்ன தயக்கத்திற்கு பிறகு, கிருஷ்ணா முதலில் ஆரம்பித்தான் "சுவாதி, உங்களுக்கு கணவரா வர போறவர் எப்படி இருக்கணும்னு எதிர்பாக்குறீங்க"

"எதிர்பார்ப்பு இல்லன்னு பொய் சொல்ல விரும்பல, ஆனா ரொம்ப பெரிய எதிர்பார்ப்பும் இல்ல." "நல்ல குடும்பத்துல இருந்து வர, நல்லா படிச்சு செட்டில் ஆன பையன் வேணும்னு அப்பா எதிர்பாக்குறார். பையன்னுக்கு எந்த கெட்டபழக்கமும் இருக்க கூடாது, பொண்ண கைக்குள்ள வைச்சி பாத்துக்கணும்-ன்னு அம்மா எதிர்ப்பாக்குறாங்க, தைரியமும், தன்மானமும் நிறைஞ்ச பையனா இருக்கணும்னு அண்ணா எதிர்பாக்குறான். இவங்க எல்லாரும் எதிர் பாக்குற பையன் கிடைக்கனும்னு நான் எதிர்பாக்குறேன்"

"வாவ் சுவாதி!! இவ்வளோ நாசூக்கா நீங்க உங்க எதிர்பார்ப்ப வெளிபடுத்துவீங்கன்னு நான் எதிர் பாக்கல!!"

ஆனா எனக்குன்னு சில எதிர்பார்ப்புகள் இருக்கு, கொஞ்சம் ஜாஸ்தியா கூட இருக்கலாம், ஆனா என் எதிர்பார்ப்புகள் என்னை சார்ந்தவை. என்னோட அப்பா, அம்மா, தம்பின்னு இதுல யாரோட பங்கும் கிடையாது. உங்க கிட்ட என்னோட எதிர்பார்ப்புகளை நான் சொல்லுறேன், அதை எல்லாம் கேட்டுட்டு, எவ்வளவு நாட்கள் வேணுமோ, அவ்வளவையும் எதுத்து யோசிச்சு எனக்கு உங்க முடிவை சொல்லுங்க என கூறிய கிருஷ்ணாவை, சற்றே குழப்பமும், என்ன சொல்ல போகிறானோ என்ற தவிப்புமாய், முதல் முறையாக, அவனின் முகம் ஏறெடுத்து நோக்கினாள் சுவாதி.

-
தொடரும்..

Friday, March 6, 2009

நிலா.. பேசுறேன்!!

விடிய காலையில் விழித்ததில் இருந்தே மனது சிந்தனை கொண்டிருந்தது. ஓவியா இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.. திருமணம் ஆன இந்த மூன்று வருடத்தில், ஓவியாவுடன் வந்த எந்த ஒரு சண்டையும், ஊடலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாக நினைவில்லை.. என்னை என் வழியிலேயே விட்டு அவள் வழியில் வரவழைத்தவள்.. திறமைசாலி, புத்திசாலியும் கூட.. ஒரு வருடத்திற்கு முன்பு லயா பிறக்கும் வரை ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ஒரு உயர்ந்த பதவியில் இருந்தவள்.. இன்று அந்த சாயல் ஏதுமின்றி வீட்டோடு இருக்கும் மருமகளாய், மனைவியாய், அண்ணியாய், அம்மாவாய் மாறிவிட்டிருக்கிறாள். எனக்கே மிகவும் ஆச்சிரியமான விஷயம் அது.

திருமணம் உறுதி செய்யப்பட்ட பின்பு அவளுடன் நான் பழகிய நாட்களில், அவள் மிகவும் பிடிவாதமான மாடர்ன் பெண்ணாகவே எனக்கு தோன்றினாள்.. தப்பித்தவறி சுடிதாரில் கூட அவளை நான் பார்த்தது இல்லை.. எப்பொழுதுமே ஜீன்ஸ் கேப்ரிசில் தான் வருவாள்.. என்னை சாராமல், தானாகவே எல்லா வேலைகளையும் செய்து கொள்ளும் அவளின் குணம் என்னை ரொம்பவே ஈர்த்து.. ஓவியா நேர்த்தியானவள், அழகானவள்.

இவளை திருமணம் செய்யும் முன்பு வாழ்க்கையில் இருந்த குழப்பங்களும், பிரச்சனைகளும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலே செய்து விட்டிருந்தன. வாழ்க்கையில் வசந்தம் வரும் என்று யாரேனும் கூறியிருந்தால் வேடிக்கை செய்கிறார்கள் என்றே எண்ணியிருப்பேன்.

நிலாவை நான் உயிராய் காதலித்துக் கொண்டிருந்த காலமது.. ஆறு வருட காதல் எங்களுடையது.. எங்களை மிகவும் நெருக்கமாகியிருந்தது அந்த ஆறு வருடங்கள்.. முதல் மூன்று வருஷங்கள் சிரித்து சிரித்து பழகி காதலை வளர்த்த நாட்கள்.. கல்யாணம் என்ற பேச்சு வந்த அடுத்த மூன்று வருஷத்தை நரகமாகியது.. நிலாவை திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை எனக்கு.. என்னை பிரிந்து செல்ல இயலாத தவிப்பு அவளுக்கு என , நாட்கள் நரகமானது.. நான் குடிக்காமலும், நிலா அழுகாமலும் படுக்கைக்கு சென்ற நாட்கள் அரிதாகின.. தூக்கம் இல்லா இரவுகள் அதிகமாகின.. அவளை பிரியவும் முடியாமல்.. அவளுடன் இருக்கவும் முடியாமல் நான் மிகவும் சிரமப்பட்ட காலமது.. இந்நேரம் நான் இருந்த உத்யோகமும் எனக்கு வெறுப்பையே தந்தது.. எல்லாம் சட்டென்று ஒரே நாளில் மாறியது போல திடீரென வாழ்வில் பல மாற்றங்கள்.. நிறைய காதலித்தும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் நிலாவை வலுகட்டயமாக பிரிந்தேன்.. [அவள் கடைசியில் செல்பேசி வழியாக கதறியது இன்னமும் காதில் கேட்பது போல உணர்வு..].. எதிர்பார்த்திருந்த தடைகள் ஏதும் இன்றி நான் விரும்பிய தொழிலை தொடங்கினேன்.. அதில் வளரவும் ஆரம்பித்தேன்.. வீட்டில் புலம்பல்கள் தாங்காமல் பெண் பார்க்க சம்மதித்தேன், ஓவியாவை சந்தித்தேன், நிறைய தயக்கங்களுக்குப் பிறகு அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன்!

என் வாழ்கையில் நிலா என்ற பெண் இருந்தாள் என்பதை மறக்கச் செய்யாவிடினும், ஓவியாவின் வருகை என் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றவே செய்தது.. ஓவியா என்னை மிகவும் நேசிக்க ஆரம்பித்தாள்.. நானும் அவ்வாறே!! [ஒருத்தரை விட்டு இன்னொருவரை காதலிக்க ஆரம்பிப்பது இவ்வளவு சுலபமா?!] ஆதலால்.. நிலாவைப் பற்றி என்றுமே ஓவியாவிடம் கூறக்கூடாது என முடிவு செய்துகொண்டேன்.. அதை இன்று வரை பொத்தி பாதுகாத்தும் வருகிறேன்! நிலாவின் நினைவு நிரம்பவும் தலை தூக்கும் போது.. மனது தொடர் நிலநடுக்கம் வந்த அந்தமானைப் போல அதிர்ந்து கொண்டே இருக்கும்.. நான் அவள் நன்றாய் இருப்பாள் என என்னைச் சமாதானம் செய்து கொள்ளாத நாளே இல்லை..

எப்பொழுதெல்லாம் அவளின் எண்ணம் வருகிறதோ.. அப்பொழுதெல்லாம் அவளின் குரலை கேட்க வேண்டும் என்ற ஆசையை என்னில் எழும்.. அவள் என்ன செய்கிறாள், திருமணம் ஆகி விட்டதா, குழந்தை இருக்குமா என்பதெல்லாம் தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை.. ஆனால் நாங்கள் பிரிந்த மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நான் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கோ, குறுந்தகவல்களுக்கோ பதில் இல்லாமல் போகவே, அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.. அவள் சொன்னது போலவே என்னால் அவளைப் பற்றின விஷயங்களை அறிந்துக் கொள்ளவே முடியவில்லை..

"முகுந்த்.. நீ அதுக்குள்ள எழுந்துட்டியா?" என கேட்டபடி ஓவியா விழித்துக் கொண்டாள்.. "குட் மோர்னிங் பேபி" என அவளுக்கு ஒரு முத்தத்தை வழங்கிவிட்டு "லயா நல்லா தூங்குறா, டயாப்பர் சேஞ்சு பண்ணிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதுனா தூங்கு மணி ஏழு தான்" என்றேன்.

"நைட் ரெண்டு மணி வரைக்கும் இன்னிக்கு சாயந்திரம் லயா பர்த்டே பார்ட்டிக்கு வர குட்டிஸ்க்கு கொடுக்க வேண்டிய கிப்ட்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு தான தூங்க போன? இப்போ என்ன அஞ்சு மணில இருந்து முழிச்சி உக்காந்துட்டு இருக்க? நீ கொஞ்ச நேரம் தூங்கு" என என்னை தூங்க சொல்லிக்கொண்டே, பாத்ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். அவள் குளித்து முடித்து வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என நான் எண்ணிய சமயம் என் கைபேசி அழைத்தது.. இவ்வளவு காலையில் யாரது என பார்த்தால், ஏதோ தெரியாத என்னில் இருந்து அழைப்பு..

ஆன் செய்து, "ஹலோ" என்று சொன்னதும், "முகுந்த்.." என மிகவும் மிருதுவாக.. எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரல்..

மீண்டும் "முகுந்த்.. நிலா பேசுறேன்" என்றது எதிர் முனை.. ஒரு நொடி, எனக்குள் வந்தது அதிர்ச்சியா, ஆனந்தமா, திகிலா, பயமா என என்னால் வரையறுக்க முடியவில்லை.. என்னுள் தொலைபேசியில் பேசி, சிரித்து, கொஞ்சி, சண்டையிட்டு, தூங்கி, அழுது, கத்தி, தேம்பி என எல்லாம் செய்த அதே குரலை, நான்கு வருடங்களுக்குப் பிறகு..

மீண்டும் மறுமுனை, "ஹலோ.. முகுந்த்.. நிலா பேசுறேன்" என்றது..

என்ன தோன்றியதோ எனக்கு.. உடனே நான்.. சற்று குரலை உயர்த்தி "யாருமா நீ.. இந்த நேரத்துல.. இங்க அப்படி யாருமில்லமா" என்றேன் கடுமையாக! ஒரு நொடி எதிர்முனை அமைதியானது.. பின்பு, "சாரி சார், நேற்று ஒரு பர்த்டே பார்ட்டிக்கு ஹால் புக் பண்ணின form- ல காண்டாக்ட் பெர்சன் முகுந்த்னு போட்டு இந்த நம்பர் போட்டிருந்துச்சு.. தெரிஞ்சவங்க என்ற உரிமைல போன் பண்ணிட்டேன்.. இப்போ தான் புரியுது ராங் நம்பர்ன்னு.. சாரி!! என கோபமாக கூறி விட்டு பட்டென்று லைன் கட்டானது.

மீண்டும் ஒரு போதும் நிச்சயமாக கூப்பிட மாட்டாள் என என்னால் உணர முடிந்தது. அவளிடம் பேச ஆசைப்படும் நான், ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை.. என் வாழ்கையில் குழப்பம் வர கூடாது என செய்தேனா, இல்லை அவளை பற்றி தெரியவரும் உண்மை ஜீரணிக்க முடியாமல் இருந்தால் என் நிம்மதி கெடும் என இப்படி செய்தேனா என எனக்கு தெரியவில்லை.. குழப்பம் ஏதும் வர கூடாது என செய்தேன் என்று தான் நினைக்கிறேன்.

என் செய்கையால் மீண்டும் ஒரு முறை காயப்பட்டிருப்பாள் .. என்னை சுயநலவாதி என எண்ணி இருப்பாள்.. நான் அவளுக்கு என்ன செய்திருக்கிறேன் காயங்கள் கொடுப்பதை தவிர்த்து?! அவள் செய்த தவறு எல்லாம்.. என்னை உண்மையாய் காதலித்தது மட்டுமே.. என்றுமே என் சுயநலத்தால்.. குற்ற உணர்வு எனக்கு, காயங்கள் அவளுக்கு!!

[இது எனது முதல் சிறுகதை முயற்சி. தவறுகளை பின்னூட்டம் இட்டு சொல்லவும், மன்னிக்கவும்.]