Friday, March 6, 2009

நிலா.. பேசுறேன்!!

விடிய காலையில் விழித்ததில் இருந்தே மனது சிந்தனை கொண்டிருந்தது. ஓவியா இன்னும் உறங்கி கொண்டிருந்தாள்.. திருமணம் ஆன இந்த மூன்று வருடத்தில், ஓவியாவுடன் வந்த எந்த ஒரு சண்டையும், ஊடலும் இரண்டு மணி நேரத்திற்கு மேல் நீடித்ததாக நினைவில்லை.. என்னை என் வழியிலேயே விட்டு அவள் வழியில் வரவழைத்தவள்.. திறமைசாலி, புத்திசாலியும் கூட.. ஒரு வருடத்திற்கு முன்பு லயா பிறக்கும் வரை ஒரு சாஃப்ட்வேர் கம்பெனியில் ஒரு உயர்ந்த பதவியில் இருந்தவள்.. இன்று அந்த சாயல் ஏதுமின்றி வீட்டோடு இருக்கும் மருமகளாய், மனைவியாய், அண்ணியாய், அம்மாவாய் மாறிவிட்டிருக்கிறாள். எனக்கே மிகவும் ஆச்சிரியமான விஷயம் அது.

திருமணம் உறுதி செய்யப்பட்ட பின்பு அவளுடன் நான் பழகிய நாட்களில், அவள் மிகவும் பிடிவாதமான மாடர்ன் பெண்ணாகவே எனக்கு தோன்றினாள்.. தப்பித்தவறி சுடிதாரில் கூட அவளை நான் பார்த்தது இல்லை.. எப்பொழுதுமே ஜீன்ஸ் கேப்ரிசில் தான் வருவாள்.. என்னை சாராமல், தானாகவே எல்லா வேலைகளையும் செய்து கொள்ளும் அவளின் குணம் என்னை ரொம்பவே ஈர்த்து.. ஓவியா நேர்த்தியானவள், அழகானவள்.

இவளை திருமணம் செய்யும் முன்பு வாழ்க்கையில் இருந்த குழப்பங்களும், பிரச்சனைகளும் எதிர்காலத்தின் மீது நம்பிக்கை இல்லாமலே செய்து விட்டிருந்தன. வாழ்க்கையில் வசந்தம் வரும் என்று யாரேனும் கூறியிருந்தால் வேடிக்கை செய்கிறார்கள் என்றே எண்ணியிருப்பேன்.

நிலாவை நான் உயிராய் காதலித்துக் கொண்டிருந்த காலமது.. ஆறு வருட காதல் எங்களுடையது.. எங்களை மிகவும் நெருக்கமாகியிருந்தது அந்த ஆறு வருடங்கள்.. முதல் மூன்று வருஷங்கள் சிரித்து சிரித்து பழகி காதலை வளர்த்த நாட்கள்.. கல்யாணம் என்ற பேச்சு வந்த அடுத்த மூன்று வருஷத்தை நரகமாகியது.. நிலாவை திருமணம் செய்து கொள்ள முடியாத சூழ்நிலை எனக்கு.. என்னை பிரிந்து செல்ல இயலாத தவிப்பு அவளுக்கு என , நாட்கள் நரகமானது.. நான் குடிக்காமலும், நிலா அழுகாமலும் படுக்கைக்கு சென்ற நாட்கள் அரிதாகின.. தூக்கம் இல்லா இரவுகள் அதிகமாகின.. அவளை பிரியவும் முடியாமல்.. அவளுடன் இருக்கவும் முடியாமல் நான் மிகவும் சிரமப்பட்ட காலமது.. இந்நேரம் நான் இருந்த உத்யோகமும் எனக்கு வெறுப்பையே தந்தது.. எல்லாம் சட்டென்று ஒரே நாளில் மாறியது போல திடீரென வாழ்வில் பல மாற்றங்கள்.. நிறைய காதலித்தும் திருமணம் செய்து கொள்ள முடியாமல் நிலாவை வலுகட்டயமாக பிரிந்தேன்.. [அவள் கடைசியில் செல்பேசி வழியாக கதறியது இன்னமும் காதில் கேட்பது போல உணர்வு..].. எதிர்பார்த்திருந்த தடைகள் ஏதும் இன்றி நான் விரும்பிய தொழிலை தொடங்கினேன்.. அதில் வளரவும் ஆரம்பித்தேன்.. வீட்டில் புலம்பல்கள் தாங்காமல் பெண் பார்க்க சம்மதித்தேன், ஓவியாவை சந்தித்தேன், நிறைய தயக்கங்களுக்குப் பிறகு அவளை திருமணம் செய்து கொள்ள முடிவெடுத்தேன்!

என் வாழ்கையில் நிலா என்ற பெண் இருந்தாள் என்பதை மறக்கச் செய்யாவிடினும், ஓவியாவின் வருகை என் வாழ்க்கையை நல்ல முறையில் மாற்றவே செய்தது.. ஓவியா என்னை மிகவும் நேசிக்க ஆரம்பித்தாள்.. நானும் அவ்வாறே!! [ஒருத்தரை விட்டு இன்னொருவரை காதலிக்க ஆரம்பிப்பது இவ்வளவு சுலபமா?!] ஆதலால்.. நிலாவைப் பற்றி என்றுமே ஓவியாவிடம் கூறக்கூடாது என முடிவு செய்துகொண்டேன்.. அதை இன்று வரை பொத்தி பாதுகாத்தும் வருகிறேன்! நிலாவின் நினைவு நிரம்பவும் தலை தூக்கும் போது.. மனது தொடர் நிலநடுக்கம் வந்த அந்தமானைப் போல அதிர்ந்து கொண்டே இருக்கும்.. நான் அவள் நன்றாய் இருப்பாள் என என்னைச் சமாதானம் செய்து கொள்ளாத நாளே இல்லை..

எப்பொழுதெல்லாம் அவளின் எண்ணம் வருகிறதோ.. அப்பொழுதெல்லாம் அவளின் குரலை கேட்க வேண்டும் என்ற ஆசையை என்னில் எழும்.. அவள் என்ன செய்கிறாள், திருமணம் ஆகி விட்டதா, குழந்தை இருக்குமா என்பதெல்லாம் தெரிந்து கொள்ள ரொம்ப ஆசை.. ஆனால் நாங்கள் பிரிந்த மூன்று நான்கு மாதங்களுக்குப் பிறகு தொடர்ந்து நான் அனுப்பிய மின்னஞ்சல்களுக்கோ, குறுந்தகவல்களுக்கோ பதில் இல்லாமல் போகவே, அவளை தொந்தரவு செய்ய வேண்டாம் என்று விட்டுவிட்டேன்.. அவள் சொன்னது போலவே என்னால் அவளைப் பற்றின விஷயங்களை அறிந்துக் கொள்ளவே முடியவில்லை..

"முகுந்த்.. நீ அதுக்குள்ள எழுந்துட்டியா?" என கேட்டபடி ஓவியா விழித்துக் கொண்டாள்.. "குட் மோர்னிங் பேபி" என அவளுக்கு ஒரு முத்தத்தை வழங்கிவிட்டு "லயா நல்லா தூங்குறா, டயாப்பர் சேஞ்சு பண்ணிட்டேன்.. இன்னும் கொஞ்ச நேரம் தூங்குறதுனா தூங்கு மணி ஏழு தான்" என்றேன்.

"நைட் ரெண்டு மணி வரைக்கும் இன்னிக்கு சாயந்திரம் லயா பர்த்டே பார்ட்டிக்கு வர குட்டிஸ்க்கு கொடுக்க வேண்டிய கிப்ட்ஸ் எல்லாம் பேக் பண்ணிட்டு தான தூங்க போன? இப்போ என்ன அஞ்சு மணில இருந்து முழிச்சி உக்காந்துட்டு இருக்க? நீ கொஞ்ச நேரம் தூங்கு" என என்னை தூங்க சொல்லிக்கொண்டே, பாத்ரூமிற்குள் சென்று கதவடைத்துக் கொண்டாள். அவள் குளித்து முடித்து வர எப்படியும் ஒரு மணி நேரம் ஆகும் என நான் எண்ணிய சமயம் என் கைபேசி அழைத்தது.. இவ்வளவு காலையில் யாரது என பார்த்தால், ஏதோ தெரியாத என்னில் இருந்து அழைப்பு..

ஆன் செய்து, "ஹலோ" என்று சொன்னதும், "முகுந்த்.." என மிகவும் மிருதுவாக.. எனக்கு மிகவும் பழக்கப்பட்ட ஒரு பெண்ணின் குரல்..

மீண்டும் "முகுந்த்.. நிலா பேசுறேன்" என்றது எதிர் முனை.. ஒரு நொடி, எனக்குள் வந்தது அதிர்ச்சியா, ஆனந்தமா, திகிலா, பயமா என என்னால் வரையறுக்க முடியவில்லை.. என்னுள் தொலைபேசியில் பேசி, சிரித்து, கொஞ்சி, சண்டையிட்டு, தூங்கி, அழுது, கத்தி, தேம்பி என எல்லாம் செய்த அதே குரலை, நான்கு வருடங்களுக்குப் பிறகு..

மீண்டும் மறுமுனை, "ஹலோ.. முகுந்த்.. நிலா பேசுறேன்" என்றது..

என்ன தோன்றியதோ எனக்கு.. உடனே நான்.. சற்று குரலை உயர்த்தி "யாருமா நீ.. இந்த நேரத்துல.. இங்க அப்படி யாருமில்லமா" என்றேன் கடுமையாக! ஒரு நொடி எதிர்முனை அமைதியானது.. பின்பு, "சாரி சார், நேற்று ஒரு பர்த்டே பார்ட்டிக்கு ஹால் புக் பண்ணின form- ல காண்டாக்ட் பெர்சன் முகுந்த்னு போட்டு இந்த நம்பர் போட்டிருந்துச்சு.. தெரிஞ்சவங்க என்ற உரிமைல போன் பண்ணிட்டேன்.. இப்போ தான் புரியுது ராங் நம்பர்ன்னு.. சாரி!! என கோபமாக கூறி விட்டு பட்டென்று லைன் கட்டானது.

மீண்டும் ஒரு போதும் நிச்சயமாக கூப்பிட மாட்டாள் என என்னால் உணர முடிந்தது. அவளிடம் பேச ஆசைப்படும் நான், ஏன் இப்படி செய்தேன் என தெரியவில்லை.. என் வாழ்கையில் குழப்பம் வர கூடாது என செய்தேனா, இல்லை அவளை பற்றி தெரியவரும் உண்மை ஜீரணிக்க முடியாமல் இருந்தால் என் நிம்மதி கெடும் என இப்படி செய்தேனா என எனக்கு தெரியவில்லை.. குழப்பம் ஏதும் வர கூடாது என செய்தேன் என்று தான் நினைக்கிறேன்.

என் செய்கையால் மீண்டும் ஒரு முறை காயப்பட்டிருப்பாள் .. என்னை சுயநலவாதி என எண்ணி இருப்பாள்.. நான் அவளுக்கு என்ன செய்திருக்கிறேன் காயங்கள் கொடுப்பதை தவிர்த்து?! அவள் செய்த தவறு எல்லாம்.. என்னை உண்மையாய் காதலித்தது மட்டுமே.. என்றுமே என் சுயநலத்தால்.. குற்ற உணர்வு எனக்கு, காயங்கள் அவளுக்கு!!

[இது எனது முதல் சிறுகதை முயற்சி. தவறுகளை பின்னூட்டம் இட்டு சொல்லவும், மன்னிக்கவும்.]